Tuesday, 20 September 2016

சுண்ணாம்பு தடவுதல் எனும் WhatsApp Facebook பஞ்சாயத்து

இந்த இன்னாப்பா சேதியும், மூஞ்சிபுத்தகமும் (அதாம்பா WhatsAppம் Face bookம்) வந்தாலும் வந்துது, நம்ம வாழ்க்கையே நாஸ்தியாயிடுச்சு. எல்லாரும் வெத்தலேல சுண்ணாம்பு தடவற மாதிரி, smartphoneஐ தடவிட்டே இருக்கோம். வேண்டாத forward, வந்த fwd திருப்பி திருப்பி பல வழில அனுப்பறது, குட் மார்ணிங் குட் நைட்டு, ஒலகத்துலயே பெரிய அறிவுஜீவி மாரி நெனச்சுக்கிட்டு தத்துப்பித்துவம், உஸ்ஸ்ஸபா ..தாங்கமுடியல.

பொங்கல் சாப்டத போஸ்ட் பண்ணிட்டு, ஐயொ லைக்கு பத்தலயேன்னு சோகசுந்தரமாகி, மெஸேஜ் டிங்னு தட்டி விடறது.(Hi What's up..போஸ்ட் பாத்தியா). சரி ஒழியறது சனியன்னு அதுக்கு லைக் போட்டா, ஏன் வாவ் போடலன்னு கவல.

"இன்னாப்பா சேதி" ல மெசேஜ் அனுப்பிட்டு, ரெட்ட டிக்கு விழுந்திச்சா, நீலமாயிடுச்சான்னு டென்சன்.

அப்றம் இந்த செல்ஃபி அலப்பற. நவரசத்தையும் தாண்டி ஒரு ரசம், "வாய்கோணரசம்". சில படத்தப் பாத்தா, " இருடா, எனக்கும் பயமாத்தான் இருக்கு!"..கிட்டக்க கேமராவவெச்சு "கண்ணைப்பார் சிரி". இல்லாட்டா தப்பான க்ளோசப்ல போண்டா மூக்கு, பளபள தல. சில கேசுல " ஆடவர், பெண்டிர்" (அதாம்பா அங்க இருக்குமே) ஃபோட்டோ.

எப்போதுக்கும் சுண்ணாம்பே தடவிட்டு, "Wow.200+ மெசேஜா..கொஞ்ச நாழி வர்லேன்னா இவ்ளவா?!"
"டேய் டேய் வட்டத்துக்குள்ள (i) அமுக்கி பாத்தபோது, நீ எல்லாத்தையும் பாத்துட்டன்னு தெரியும்டா. இப்ப எதுக்கு பிலிம் காட்டற"ன்னு கேக்கத்தோணும்; ஆனா "Quite busy?!" அப்டின்னு நைஸா நக்கல் அடிச்சது புரியாம, "Yup!" அப்டின்னு பதில் வரும்.

எல்லாத்தையும் விட கொடுமை இந்த fwd மெசேஜ் அனுப்பறதுதான்.

பாவம் இந்த அப்துல் கலாம், அவர ஆனாலும் இப்டிப் படுத்தக்கூடாது. கண்டத போட்டுட்டு அவர் பேர இழுத்து, சந்தில வுட்டு.."என்ன விட்டுருங்க" அப்டின்னு அவரே கதறுவார். அதுல டாப், அப்துல் கலாம் சின்னப் பையனா, latest model sports cycleல பேப்பர் போறதுதான்.

ஒரு வாட்டி இந்த fwd அனுப்பறவனுக்கும், அதுக்கு "சூப்பர்" போட்ட உசுப்பேத்திகளுக்கும் அவன் அமிச்ச fwd மெசேஜ்லெர்ந்து டெஸ்ட் வெக்கணும். அதுல பாஸ் பண்ணலென்னா நாளெலேர்ந்து  சுண்ணாம்பு கெடையாதுன்னு ரூல் போடணும்.

போன மாசம் எனக்கு புறநானூறு தாண்டி 401வது செய்யுள் கெடச்சுது. அத எழுதினவர் கழைதின் யானையார்..
..
..
முன்னெடுபனுப்புதல் இழிந்தன்று, அதன் எதிர்
மேலும் அனுப்புதல் அதனினும் இழிந்தன்று
சொந்தசரக்கை அனுப்புதல் உயர்ந்தன்று, அதன் எதிர்
மேலும் வினவுதல்  அதனினும் உயர்ந்தன்று
தெண்ணீர்ப் பரப்பின் இமிழ்திரைப்  பெருங்கடல்
உண்ணார் ஆகுப நீர் வேட்டோரே
ஆவும் மாவும் சென்று உணக் கலங்கிச்
சேற்றொடு பட்ட சிறுமைத்து ஆயினும்
உண்ணீர் மருங்கின் அதர் பல ஆகும்
சுற்றமும் நட்பும் பழித்தல் அல்லதை
சொந்தசரக்கு அனுப்புவோர் பழியலர் அதனால்
வாழிய கோமான் தன் சரக்கு
வரையாது சுரக்கும் விளம்புவோர் தன்னே.

( பொழிப்புரை:
Forward அனுப்புவது இழிவு. அதை reforward செய்வது அதைவிட இழிவு. சொந்த சரக்கை post செய்வது உயர்வு. கேள்வி கேட்டு அதை மேலும் discuss பண்ணுவது அதைவிட உயர்வு.

கடலில் தெளிவான நீர் மிகுதியாக இருந்தாலும் தாகம் உள்ளவர் அதனை உண்பதில்லை. ஆனிரைகளும் அவற்றைக் கொன்று தின்னும் விலங்கினங்களும் சென்று உண்ணும் கலங்கிய நீராயினும் அதனை உண்ணச் செல்வோரின் எண்ணிக்கை மிகுதியாதலால் அதற்கு அமைந்த நடைபாதைகள் பல.

அதுபோல மெய்யான சுற்றமும் நட்பும், சுமாரான சொந்த சரக்கு அனுப்பினால் கூட அதைக் கொண்டாடும். அதனால் மொக்கையாக இருந்தாலும் சொந்த சரக்கு அனுப்ப வேண்டும்.)

ஆனா எவ்ளவுதான் திட்டினாலும், இந்த அக்கப்போர் இல்லாட்டா, அரிப்பெடுத்தவன் மாரி பரபரன்னுதான் இருக்கு.