Sunday, 20 June 2010

தமிழ் “படுத்துதல்”

தமிழன் என்றொரு இனமுண்டு; தனியே அவர்க்கொரு குணமுண்டு.

மும்பையில் ஒரு மாநாட்டுக்கு வந்த சென்னைத் தமிழர்,

“தமிளனுக்கு குடுக்க வேண்டிய “ரெஸ்பெக்ட” அங்க தரலீங்க” என்றார்.
“என்னாச்சுங்க?”
“எனக்கு “காரே” அனுப்பலீங்க; அனுப்ப முடியாதுன்னுட்டாங்க. (அன்பர் பேசப் போகவில்லை; சும்மா பார்க்கப் போனவர்!). அங்க போனா எனக்கு “ஃபோர்த் ரோ”லதான் எடம் கெடச்சுது….. ஒரு தமிளன இது போலவா “ட்ரீட்” பணணுவாங்க?. ரொம்ப “சேம்” ஆயிடுச்சு”.

தமி”ள”ர் மூன்று வரியில் ஆறு ஆங்கில வார்த்தைகளை நுழைத்து ரொம்ப “ஃபீலிங்” காட்டினார்.

அது ஏனொ தெரியவில்லை; நம்மில் பலருக்கு ஒரு தாழ்வு மனப்பான்மை. கூடவெ, “நான் தமிழன்; கல் தோன்றி மண் தோன்றாக் காலத்துக்கு முன் தோன்றிய மூத்த பழங்குடி. எனக்கென்று ஒரு தனித்தன்மை உண்டு.” என்ற ஒரு உயர்வு உணர்ச்சி வேறு. இரண்டும் கலந்த ஒரு கலவை நாம்.

தமிளில் மூன்று வகையான “ள” இருக்குது

நம்மில் பல தமிழர்களுக்கு, ல, ள, ழ வேற்றுமையே தெரியாது.
“தமிளில் மூன்று வகையான “ள” இருக்குது. “ள”, “ள”, “ள”. உதாரணத்துக்கு, “ஒளி”, ஒளி, ஒளி….…
முதல் ஒளி - ஒளின்னா வெளிச்சம் - லைட்டு
ரெண்டாவது ஒளி .. ஒளின்னா சத்தம் - சவுண்டு
மூணாவது ஒளி…… ஒளின்னா தொலைந்து போ - கெட் லாஸ்டு….
எளுதுங்க பார்ப்பம்…
“மயிளின் வாள் நீளமாகவும் அளகாகவும் இருக்கும்”
பையனுக்கு குழப்பம்… “மயில், வால், அழகு.. இதெல்லாம் சரி.. நீளமா? நீலமா??”


தமிள் வால்க! தமிளர் புகள் ஓங்குக!


எங்கும் தமிழ் எதிலும் தமிழ்

யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்…
பிற மொழி வார்தைகளைத் தவிர்ப்பது ரொம்ப முக்கியம். எவ்வளவு தமிழ் படுத்த முடியுமோ அவ்வளவு தமிழ் “படுத்த” வேண்டும்.

சென்னை விமானநிலையத்தில் “ஆடவர்க்காக”, “பெண்டிர்க்காக” மற்றும் “மெய்புல அறைகூவலர்க்காக” கழிப்பிடம் இருக்கிறது. “மெய்புல அறைகூவலர்” என்றால் அறிவிப்பாளரொ?!..... இல்லையாம் - “உடல் ஊனமுற்றொராம்”

“எப்டிங்க இந்த வார்த்தைய புடிச்சீங்க”
“Physically Challenged”.. “Physical”னா “மெய்புலம்”. “Challenged”… இந்த Champion, Challengerனு வருமே… அதாவது, Championட்ட சண்ட போட “அறைகூவல்” விடுவாங்களே, அதுனால, Challengedனா “அறைகூவலர்”…
(நல்லா கூவுறாங்க….)

மேல் நிலை பொருளாராதாரப் பாடத்தில் ஒரு வரி படித்த ஞாபகம்…
“அரசாங்கத்துக்கு இந்த வகையில் விளையாட ஒரு உருளை இருக்கிறது”
அதாவது Government has got a role to play in this.

(எப்பூடி… ரூம் போட்டு ஒரு மார்க்கமா யோசிப்பாய்ங்களோ?!)

ஆனா பேசும் போது தமிழ் வரும்ம்ம்ம்… ஆனா வராது..

“சார், டைம் என்ன?”
“டென் தற்டி”
“அடடா லேட் அயிடுச்சே! சார், டொல் பி போய்ட்டானா?”
“தெரியல சார்… ஆனா ரொம்ப ரஷ்ஷா இருக்குமே!”
“க்ரௌட பாத்தா முடியுமா சார்.. டயத்துக்கு ஆஃபீஸ் போலேன்னா மேனேஜர் மெமோ கொடுப்பானே!.
“பேசாம ரிஸைன் பண்ணிட்டு வேறே ஜாப் ட்ரை பண்ணுங்களேன்.”
“ரிஸெஷன்னால, ஜாப் மார்க்கெட் ஹொப்லெஸ்ஸா இருக்கு சார். இருக்கற ஜாபும் போச்சுன்னா, வீட்டுல வொய்ஃப்ட்டல்ல பேச்சு வாங்கணும்.”
“யு ஹவ் அ பாயிண்டு”

ஆகா… தாங்கமுடியலப்பா! “தமிழ் எந்தன் மூச்சு” …டூ மச்சு!!


பட்டப்பெயர் ரொம்ப முக்கியம்

தமிழனுக்கு பெற்றோர் இட்ட பெயரைவிட பட்டப்பெயர் ரொம்ப முக்கியம். நம்மை பெயர் கொண்டு அழைத்தால், மரியாதை இல்லை. உயர்வு நவிற்சியோடு ஒரு பட்டப்பெயர் ரொம்ப முக்கியம்.
“குறுமுனி” அகத்தியர், ஔவை”ப்பாட்டி”, “முல்லைக்குத் தேர் கொடுத்த” பாரி, “கடாரம் கொண்ட” இராசேந்திரன், வழியில்……..

சுப்ரமணிய “பாரதியார்”, “கப்பலோட்டிய தமிழன்” வ உ சி…. வழியில்…..

“கர்ம வீரர்” காமராஜ், “அறிஞர்” அண்ணா, “நடிகர் திலகம்” “சிவாஜி” கணேசன்… வழியில் வந்த நாம் எப்படி தாய் தந்தை இட்ட பெயரோடு பெரிய ஆள் ஆக முடியும்.

(“இதெல்லாம் மக்களும் படிச்சவங்களும் மரியாதையொடும், அன்போடும் வெச்ச பேருங்க”)

அரசியல், “சினிமா”, ஊடகம்… கலை, இந்த துறைகளில், பட்டப்பெயர் சொல்லித்தான் அழைக்க வேண்டும். இல்லையேல் மரியாதை இல்லை.

“இன்னிக்கு இளைய தளபதி படம் ரிலீஸு:
“மீஸிக் யாரு?”
“இசைஞாநி”


உண்மையாக யாராவது பட்டப்பெயர் கொடுத்தால் நல்லது; அல்லது யாராவது பத்து பேரைக் கூப்பிட்டு விழா எடுத்து ஒரு நல்ல பெயராக வைத்துக்கொள்ள வேண்டும்.(இல்லேன்னா நாமளே வெச்சுக்க வேண்டியதுதான்”) Only then you have arrived.

தமிழன் என்று சொல்லடா “தல” நிமிர்ந்து நில்லடா.